வேலூர் - கொசப்பேட்டையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் நடத்தி வரும் 33 வயது நபருக்கும் அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இத்திருமணம் குறித்து வந்த ரகசியத்தகவலின் அடிப்படையில் வேலூர் சமூக நலத்துறை மற்றும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினர் கொசப்பேட்டை பகுதிக்குச் சென்று சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் 13 வயது சிறுமிக்கு 19 வயது என போலிச் சான்றிதழ் பெற்றிருப்பது தெரியவந்தது.
சிறுமிக்கு 13 வயது என்பதால் திருமணம் செய்தால் சட்ட ரீதியாகப் பிரச்னை ஏற்படும் என்பதை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவரிடம் சிறுமிக்கு 19 வயது என போலியாக சான்று பெற்று, அதன் மூலம் வேலூர் மாநகராட்சியில் 13 வயது சிறுமிக்கு 19 வயது என போலியாக பிறப்புச் சான்றிதழை வாங்கியுள்ளனர்.
மேலும், இதை வைத்து சிறுமிக்கு தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலி சான்றிதழ் வாங்கியது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணனின் துக்க காரியத்திற்குச் செலவு செய்யப்பணம் இல்லாததால் தங்கை தற்கொலை