வேலூர்: சென்னை - பெங்களூரு விரைவு இரயில் இன்ஜினில் வெளியான புகை காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. 12 நிமிடங்களில் இரயில்வே ஊழியர்களால் இரயில் என்ஜின் சரி செய்யப்பட்டதால் 12 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்த விண்ணம்மங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பெருமளவில் புகை C6 பெட்டியில் இருந்து வந்தது.
திடீரென ஆபத்தைத் தடுக்கும் விதத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஓடும் இரயிலில் இருந்து புகை வந்ததாலும், ரயில் உடனடியாக பாதி வழியில் நிறுத்தப்பட்டதாலும் இந்த இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். இதன் காரணமாக, ரயிலில் அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்து புகை வந்த பகுதி முழுக்க தீவிர சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள் - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
அப்போது பிரேக் பழுது காரணமாக ஓடும் ரயிலில் இருந்து புகை வந்திருப்பது தெரியவந்தது. பின்னர் ரயிலில் இருந்த ரயில்வே ஊழியர்களை (மெக்கானிக்) வைத்து சரி செய்தனர். இதையடுத்து பிரேக் பகுதியில் இருந்த பழுதை ரயில்வே ஊழியர்கள் 12 நிமிடங்களில் சரி செய்தனர். சரியாக 12 நிமிடங்களுக்குப் பிறகு ரயில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதனால் இன்று சென்னை - பெங்களூரு விரைவு டபுள் டக்கர் ரயில் சுமார் 12 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ரயிலில் ஏற்பட்ட பிரேக் பழுதின் காரணமாக புகை வந்துள்ளது. ரயிலில் பயணம் செய்த பயணியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்து உள்ளது. சமீப காலமாக ரயில் விபத்துகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஓடும் ரயிலில் புகை வெளிவந்து ரயிலானது பாதி வழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசின் திட்டங்களால் கடல் வளம் பாதிப்பு - கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமம் தகவல்