வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு சார்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட விவசாயிகளுடன் ஒருங்கிணைந்த கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, நிலைக்குழு தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், கதிர் ஆனந்த், உள்பட 9 எம்.பி.க்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் , வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ’இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி எனவே விவசாயிகள் தங்கள் கோரிக்கையை ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும், உரத்துக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிககி வைத்தனர்.
இந்நிலையில், ஆலங்காயத்தை சேர்ந்த விவசாயி சின்னத்துரை(70) பேசுகையில், "விவசாயிகளுக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை அலுவலர்கள் அமைச்சர்கள் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று பேசிவிட்டு செல்கின்றனர் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. உங்களிடம் ரூ. 100 கோடி பணம் இருந்தாலும் அதை நீங்கள் உண்ண முடியாது விவசாயம் செய்தால்தான் சோறு சாப்பிட முடியும். எனவே, விவசாயிகளுக்கு 100% விவசாய அட்டை வழங்க வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, " நிச்சயம் உங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி அளித்தார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், " இங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது நிச்சயமாக விவசாயிகள் முன்வைத்த பிரச்னைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கும் கொடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் கொள்முதலில் 1,480 கோடி ஊழல் - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு