ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன் அவரது மனைவி நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மகள் திருமணத்திற்காக நளினி பரோலில் வெளி வந்து சில தினங்களுக்கு முன்புதான் மீண்டும் சிறைக்கு திரும்பினார். இந்த சூழ்நிலையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முருகன் தங்கியிருக்கும் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்ஃபோன் மற்றும் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறைத்துறை அலுவலர்கள் பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முருகன் மீது இன்று பாகாயம் காவலர்கள் சிறை விதிகளுக்கு புறம்பான பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏழு தமிழர் விடுதலைக்காக பல்வேறு இயக்கங்கள், அவர்களுடைய வழக்கறிஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தற்போது முருகன் மீது இந்த வழக்கு பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விடுதலை புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வைகோ குற்றச்சாட்டு