வேலூர்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, வேலூர் மண்டலத்தில் 616 அரசுப் பேருந்துகள் இயங்குகிறது. குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய பணிமனைகளில் இருந்து 299 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலூர், ராணிப்பேட்டை உள்ளடக்கிய விழுப்புரம் கோட்டத்தில் இருந்து காலை 8 மணி நிலவரப்படி 84.02 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் சென்பாக்கம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட அரசு பணிமனையில் இருந்து பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்படுகின்றன. பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பயணி அருண் கூறுகையில், “நான் பள்ளிகொண்டான் அருகில் வேலை பார்ப்பதால் தினமும் பேருந்தில் பயணிக்கிறேன். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எல்லா மாவட்டத்திற்கும் செல்கின்ற பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
மேலும், திருப்பதி, சென்னை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. ஒரு சில ஓட்டுநர்கள் புதிதாக தெரிகின்றனர். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் வேலை நிறுத்தம் நடந்தால், அதை பொதுமக்களாகிய நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.
இது குறித்து பயணி கோதண்டராமன் கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அந்த போராட்டத்தை தகர்த்து போக்குவரத்து வசதியை அரசு சிறப்பாக ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் எந்த வித தடையும் இல்லாமல் இயங்குகின்றது” என்றார்.
இது குறித்து தமிழ்நாடு மனித உரிமைகள் மாநில தொழிற்சங்கம் பொதுச் செயலாளர் அசோக் குமார் கூறுகையில், “தமிழக அரசிடம் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினோம். தற்போது ஒரு கோரிக்கையாவது வலியுறுத்த வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆளும் கட்சி நிர்வாகம், அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குகின்றனர்.
இதனால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் என்றால், இந்த போராட்டம் முடியும் வரை அரசுப் பேருந்தில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பணிமனையிலும் அனுபவமில்லாத ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குகின்றனர். தமிழக அரசு போக்குவரத்து துறையை மதிக்கவில்லை” என்று கூறினார்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசுப் பேருந்து பணிமனையில் வழக்கமாக மொத்தம் 85 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 62 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பணிமனையில் இருந்து 34 பேருந்துகளும், பல்வேறு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 28 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதாகவும், சராசரியாக 72 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஆற்காடு பணிமனை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் காரணமாக மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில், ஆற்காடு பணிமனையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரும், மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்..!