உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பத்தலபள்ளி, சைனகுண்டா, பொன்னை, கிருஷ்டியான்பேட்டை, சேர்காடு, பரதராமி ஆகிய 6 சோதனைச்சாவடிகளில் பொன்னை, சைனகுண்டா சோதனைச் சாவடிகள், மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 26) பொன்னை, சைனகுண்டா சோதனைச்சாவடி சாலைகளை முழுவதுமாக மூடும் வகையில் 3 அடி உயர தற்காலிக சுவர் எழுப்பப்பட்டது. சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களின் வருகை பாதிக்காத வகையில், ஆந்திராவிலிருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஷ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட நிர்வாகம், இரு சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி வழியாக அவசர மருத்துவத் தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள், நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவார்கள், எனவே அவற்றை அகற்றுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது.
அதனை ஏற்று பொன்னை, சைனகுண்டா எல்லைப் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சுவர்கள் அகற்றப்பட்டு, வழக்கம் போல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆந்திராவில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்