வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து திமுக வெற்றிக்கு பாடுபடும். எங்கள் கட்சியைச் சேர்ந்த வாலாஜா அசேன் என்பவர் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் கட்சி கேட்டுகொண்டதற்கு இனங்க அவர் வாபஸ் பெற்றுகொண்டார். அதிமுக அரசு திவாலான அரசு. தமிழகத்தின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அரசால் எந்த ஒரு சமூக நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாது, அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்பாகவே இருக்கும். இது பற்றி கூச்சப்பட வேண்டிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "வைகோ மீது சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு கூறுவது தவறானது, வைகோ எப்போதும் தமிழர்களுக்கும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர். ராகுல் காந்தி காணாமல் போய்விட்டார் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது. காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த ஜிகே வாசனுக்கு காங்கிரசைப் பற்றி கருத்து கூற அருகதையில்லை" என்று கே.எஸ் அழகிரி கூறினார்