வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 3,456 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 347 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், இரண்டு வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று வேலூர் சரக டிஐஜி வனிதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 800 ராணுவ வீரர்கள் சில தினங்களுக்கு முன் ரயில் மூலம் வேலூருக்கு வந்தடைந்தனர். இதனையடுத்து வேலூரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவ வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். வேலூர் காட்பாடி விருதம்பட்டு பகுதியிலிருந்து சித்தூர் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில் துணை ராணுவப்படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.