வேலூர்: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான மகளிர் உரிமைத் திட்டமானது தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமானது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் மொத்தமுள்ள 699 நியாய விலைக் கடைகளில் மொத்தம் 4 லட்சத்து 53ஆயிரத்து 934 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், முதற்கட்டமாக 418 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட 3லட்சத்து 2ஆயிரத்து 955 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக 281 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 50ஆயிரத்து 987 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5 முதல் 16 ஆம் தேதி வரையும் பதிவு செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , “இத்திட்டத்துக்கான விண்ணப்பங்களை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் தெரு வாரியாக வந்து நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வீடுகளுக்கே சென்று குடும்ப அட்டை எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு வழங்குவர்.
விண்ணப்பம் வழங்கப்படும்போதே விண்ணப்பத்துடன் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் இடம், நாள், நேரம் ஆகியவை அடங்கிய டோக்கனும் இணைத்து வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்குச் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை விண்ணப்பப்பதிவு முகாம்களுக்கு கொண்டு வரவேண்டும். விண்ணப்ப முகாம்களுக்குச் செல்லும்போது பெண் உறுப்பினரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது ஆகியவற்றின் அசல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
எந்தெந்த நாட்களில் எந்தெந்த தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் என்ற விவரம் நியாய விலைக் கடைகளில் தகவல் பலகையில் வெளியிடப்படும். விண்ணப்பபதிவு காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் நடத்தப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான சந்தேங்கள், புகார்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவல கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் இதுதவிர, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை 0416 2220519 (வேலூர்), 0416 2276443 (அணைக்கட்டு), 0416 2297647 (காட்பாடி), 0416 2997219 (கே.வி.குப்பம்), 04171 221177 (குடியாத்தம்), 04171 292748 (பேரணாம்பட்டு) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Vijay Iravu Padasalai: நடிகர் விஜயின் செயலுக்கு வானதி சீனிவாசன் பாராட்டு!