வேலூர் காட்பாடி அடுத்த கிருஷ்டியான்பேட்டை, சேர்காட்டில் என இரண்டு இடங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு - ஆந்திர எல்லை சோதனைச்சாவடிகளில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வரும் வாகனங்களிடம் லஞ்சம் பெறுவதாக வந்த தொடர் புகாரை அடுத்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, ஹேமசித்ரா தலைமையிலான இரண்டு குழுவினர் இன்று (டிச.12) அதிகாலை 4.00 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் இருந்து 94 ஆயிரம் ரூபாயும், சேர்காடு சோதனைச்சாவடியில் இருந்து 38 ஆயிரம் என மொத்தம் கணக்கில் வராத 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கிருஷ்டியான்பேட்டை மோட்டர் வாகன ஆய்வாளர் ராம் கண்ணன், சேர்காடு மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா ஆகியோரிடம் விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.