வேலூர்: ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் செயல் அலுவலராகப் பணியாற்றி வருபவர் ராமு(52). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், ராமு போலி ரசீதுகளைப் பயன்படுத்தி செய்யாத வேலைகளுக்கு பணம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையிலானக் குழுவினர் இன்று (டிச.4) ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், “ஒடுகத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற ராமு மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது. நிர்வாகத்தில் ரூ.10 ஆயிரம் வரை மேற்கெள்ளப்படும் பணிகளுக்கு அவரே ஒப்புதல் அளிக்கலாம். அதற்குமேல் நடைபெறும் பணிகளுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஒப்புதல் பெற வேண்டும்.
இதில், ரூ.10 ஆயிரம் வரை பணத்தை கையாளும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரூராட்சி பகுதியில் குழாய் சேதமடைந்து சீரமைத்தது, மின்விளக்கு பொருத்தியது, பிளீச்சிங் பவுடர் வாங்கியது, சுண்ணாம்பு மூட்டை வாங்கியது, மின்மோட்டார் பழுது பார்த்தது போன்றவற்றின் கீழ் செய்யாத பணிகளுக்கு ரசீது எழுதி பணத்தை எடுத்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் ரூ.30 லட்சம் அளவுக்கு கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு நிர்வாகத்தில் இருப்பவர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக அவர் முறைகேடான பணத்திலிருந்து கமிஷன் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை வாங்க வந்த நேரத்தில், நடத்தப்பட்ட சோதனையில் பேரூராட்சித் தலைவர் சத்தியாவதியின் கணவர் பாஸ்கரனிடம் இருந்து ரூ.55 ஆயிரம், இரு கவுன்சிலர்களிடம் இருந்து தலா ரூ.10 ஆயிரம் என மொத்தமாக ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையின் போது ஒடுகத்தூர், வேலூர், காட்பாடி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல் கடைகளின் காலி ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ரசீதுகளில் தேவைப்படும் தொகையை செயல் அலுவலரே பூர்த்தி செய்து பணத்தை எடுத்துள்ளார். இந்த முறைகேடு குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் எதிரொலி - அண்ணா மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!