வேலூர்: ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் சார்பில் சர்வதேச உடலுறுப்புகள் தானம் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோஜா செல்வமணி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "உடலுறுப்பு தானம் குறித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறேன். எந்த கடவுளோ, மதமோ உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது என கூறவில்லை. உடலுறுப்பு தானம் செய்வதின் மூலம் மரணத்துக்கு பிறகும் உயிர் வாழ முடியும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தானத்தில் சிறந்தது என்று முன்பு அன்னதானத்தைக் கூறியதாகவும், இன்று தானத்தில் சிறந்தது உடலுறுப்பு தானமாகும் என்று கூறினார். மேலும் அன்னதானம் பசியைப் போக்கும் என்றும், கல்வி தானம் அறியாமையை அகற்றும் என்றும் கூறிய அவர், உடலுறுப்பு தானம்தான் உயிரைக் கொடுக்கும் என்று கூறினார்.
"உடலுறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு உயிர்கொடுப்பதால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் உறுப்பு தானம் செய்தவர்களைக் கடவுளாக வணங்குவர். அந்த குடும்பங்கள் உடலுறுப்பு தானம் செய்தவரைப் பிரம்மாவுக்கு நிகராக போற்றுவார்கள். எனவே, ஒருவர் மரணித்தபிறகு அவரது உடலை மண்ணில் புதைக்காமல், உடலுறுப்பு தானம் மூலம் மனிதர்களின் மேல் விதைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என ஆந்திர அமைச்சர் ரோஜா செல்வமணி பேசினார்.
அதன்படி, உடலுறுப்பு தானத்தின் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புணர்வு அடைவதுடன், மற்றவர்களுக்கும் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை ரோஜார் செல்வமணி தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து விழாவில் பேசிய வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, "விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடல் உறுப்பு தானம் அவசியமாகிறது. தானம் என்பது ரத்த தானம், கண் தானம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றார். அந்த நிலை மாறும், உடல் உறுப்பு தானம் மூலம் அனைத்து உறுப்புகளையும் வழங்கலாம் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது" என பேசினார்.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கௌர விருந்தினராக பங்கேற்று பேசினார். மேலும் உடலுறுப்பு தானத்தின் அவசியம் குறித்து மருத்துவர்கள் ஏ.கார்த்திகேயன், எஸ்.எழில்நிலவன், வினோத்குமார், மணிகலா, பி.ஜெகன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
மேலும் மருத்துவமனையின் இயக்குநர் என்.பாலாஜி தலைமை வகித்தார். முதுநிலை செவிலிய கண்காணிப்பாளர் ஜி.விமலா வரவேற்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா இனியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். செவிலியர்கள் பிரிவு கண்காணிப்பாளர் வி.வனிதா நன்றியுரை கூறினார்.