வேலூர்: பேரணாம்பட்டை அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி (77). இவர் தனது மகன்கள், குடும்பத்தினருடன் நேற்று (ஜூன் 22) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேசிய சரஸ்வதி, "எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் ஆகியோர் பேரணாம்பட்டு பிரதான சாலையில் மளிகைக்கடை நடத்திவந்தனர்.
பல ஆண்டுகளாக அங்கு கடை நடத்திவருகிறோம். கடை அமைந்துள்ள இடம் ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதால் நிலத்திற்கான தரை வாடகையை முறையாகச் செலுத்திவந்தோம்.
இந்நிலையில் வாடகை உயர்த்தப்பட்டதால், தற்போது கரோனா காலம் என்பதால் எங்களால் அதைச் செலுத்த முடியவில்லை என்று கூறினோம். இந்தச் சம்பவம் நடந்து சில நாள்களில் கடைகளுக்குப் பூட்டு போட்டுவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 21) திடீரென பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கடையை இடித்துவிட்டனர். கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. சில பொருள்களை அங்கிருந்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.