வேலூர்: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா மினி கிளினிக் எனப்படும் மருத்துவத் திட்டம் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த மினி கிளினிக்குகள் போதிய செயல்திறன் இல்லாததால் மூடப்படுவதாக தற்போதைய திமுக அரசின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
இந்நிலையில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான ஒப்பந்தத்தை மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டிருந்தது.
இச்சூழலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், பணியிலிருந்து திடீரென விடுவித்ததாகவும் கூறி சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று (ஜனவரி 31) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளர் கருணாகரன் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இணை இயக்குநரை, போராட்டகாரர்கள் சந்தித்தனர். மேலும் அவர் அளித்த உத்திரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு தொடக்கம்