நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, வேலுார் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கரீம் பாஷா, அமமுக சார்பில் அதிமுகவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாலசுப்பிரமணி, சுயேட்சையாக போட்டியிட கோபி என்பவரும் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் அலுவலர் பேபி இந்திராவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பமாகி, இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது.