காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காந்திநகா், சேண்பாக்கம் பகுதி திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நேற்று (பிப். 17) நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய துரைமுருகன், "நான் பல தோ்தல்களைப் பாா்த்துள்ளேன். இரவு, பகல் பாராமல் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், இந்தத் தோ்தல் அப்படியல்ல.
ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறிடுக
நான் திமுக பொதுச்செயலராக இருப்பதால் தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இத்தோ்தலில் கட்சியினர் ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி பணியாற்றிட வேண்டும்.
தோ்தல் பணியாற்றும் பூத் கமிட்டி உறுப்பினா்கள் பூத் சிலிப்பைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் விடுபட்டோா் பெயா்கள் குறித்து சரிபாா்க்க வேண்டும். நூறு வாக்குகளுக்கு ஒருவா் பொறுப்பேற்க வேண்டும்.
பணபலம், படைபலம்... அதிமுக vs திமுக
வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தல் திமுகவா, அதிமுகவா என்ற பலப்பரீட்சைபோல் நடக்க உள்ளது. இந்தத் தோ்தலில் ஆளும்கட்சியினா் பணபலம், படைபலம் காட்டலாம்.
அதைத் தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை திமுகவினருக்கு உண்டு. அந்த வகையில், இந்தத் தோ்தலில் திமுக வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றாா்.
மக்கள் பிரதிநிதியாக கருணாநிதியின் 'துரை'
திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அடுத்து நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் துரைமுருகன். தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் மிக மூத்தவரும் இவரே!
துரைமுருகன் 1971, 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் வென்று மக்களின் பிரதிநிதியாக இருந்தார். அதுமட்டுமல்லாது, 1996 முதல் தொடர்ச்சியாக காட்பாடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவருகிறார்.
மேலும், 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் வாகைசூடி (எம்ஜிஆர் அரசியலில் உச்சகட்டமாக இருந்த சமயம் அது!) மக்கள் பிரதிநிதியாகச் செயல்பட்டவர்.