தமிழ்நாடு வனத் துறை சார்பில் வன உயிரின வார தொடக்க விழா வேலூர் மாவட்டம் அமிர்தி உயிரியல் பூங்கா சாலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் தலைமை தாங்கினார். வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் வனத் துறை உயர் அலுவலர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "தமிழ்நாடு வனப்பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக வெளிநாடு சென்று வந்தோம். அங்கிருப்பதை போல் இரவு நேரங்களில் உயிரியல் பூங்கா சாலைகள் திறப்பது குறித்து திட்டமிட்டுவருகிறோம்.
அதற்கான சூழல் அமிர்தியில் உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே குறை சொல்கிறார்கள். தற்போது நடைபெறவுள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும்.
வனத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையே இல்லாத வகையில் ஆன்லைன் மூலம் ஆட்கள் தேர்வு செய்துவருகிறோம். மூன்று மாதத்தில் எல்லா பிரச்னையும் சரியாகும். வனப்பகுதியில் தடுப்பணை கட்ட தடை எதுவுமில்லை. முதலமைச்சரின் உத்தரவின்பேரில் ஆங்காங்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது’’ என்றார்.
இதையும் படிக்கலாமே: நீதான் தைரியமான ஆளாச்சே; சண்டைக்கு வா'! - திமுகவை வம்புக்கிழுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி