வேலூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசிய போது, "நான் பல காலமாக திமுகவில் உள்ளேன். இனிவரும் காலங்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் நான் மறைவேன். அப்போது, தனது மறைவிற்குப் பிறகு எனது கல்லறையில் கோபாலபுரத்தின் விசுவாசி உறங்குகிறார் என ஒருவரியில் எழுதி வைத்தால் போதும்" என உருக்கமாகப் பேசினார்.
அவர் பேசிய இந்த வார்த்தைகளைப் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு(ஐடி) நிர்வாகி அருண்குமார் என்பவர் அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறாகப் புகைப்படம் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். அதில் "இங்கே கோபாலபுரத்து கொத்தடிமை உறங்குகிறான்" என அவருடைய புகைப்படத்துடன் கூடிய சாமாதி போன்று வடிவமைத்திருந்தது.
அருண்குமாரின் இந்த பதிவு திமுகவினர் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக நிர்வாகிகள் சிலரும் கூட அருண்குமாரை கண்டித்ததாக தகவல் வெளியானது. காரணம் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மூத்த அரசியல் தலைவர்களில் அமைச்சர் துரைமுருகனும் ஒருவர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக காட்பாடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வன்னியராஜா காட்பாடி காவல் நிலையத்தில் புகைப்பட ஆதாரத்துடன் கூடிய புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரின் பேரில், காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் புகைப்படம் சித்தரித்துப் பரப்பிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அருண்குமாரைப் பொள்ளாச்சியில் வைத்து புதன்கிழமை கைது செய்து விசாரணைக்காக வேலூர் அழைத்து வந்தனர். அருண்குமார் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.