திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்று மேடு பகுதியில் 15ஆவது நாளாக CAA, NRC, NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டக்களத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் பேசியபோது, “இந்த தொகுதியில் தெளிவாக சொல்கிறோம் மக்களுக்கு பணியாற்றுவதற்கு தான் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் ஆகியோர் உள்ளனர். நம் உணர்வுக்கு மதிப்பளித்து வருகின்ற சட்டப் பேரவை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.
முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதாரங்கள் கேட்கிறீர்களே, உங்கள் அம்மா கொண்டுவந்து தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் கிடைக்கக்கூடிய குழந்தைகளின் தாய், தந்தை பெயர் தெரியுமா?, அவர்களுக்கு சான்றுகள் உள்ளதா?. நீங்கள் துரோகம் செய்வது எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும், உங்கள் அம்மா கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டத்திற்கும் தான்” எனக் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் இருக்கக்கூடிய 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகாரில் பிஜேபி தோழமை கொண்டுள்ள மாநிலத்தில் NPRஐ செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
எனவே தமிழ்நாட்டிலும் மக்கள் தொகை பதிவேடு என்பது 2010ஆம் ஆண்டு இருந்தது போல் தான் இருக்க வேண்டும் என்றும் புதிய நடைமுறையை நடைமுறைபடுத்த மாட்டோம் என்பதையும் உறுதிபட சொல்ல கூடிய வகையிலே வருகின்ற 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானத்தை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: சிஏஏ நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது - திருமாவளவன் எம்.பி.