உலக நாடுகளை நிலைகுலையச் செய்த கரோனா இந்தியாவிலும் தன்னுடைய கோரமுகத்தைக் காட்டிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும் அதன் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை எட்டு நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா கொடியது, அதனால் நிகழும் மரணம் அதைவிட கொடியது, இவையிரண்டையும்விட இறுதிச் சடங்கு கொடியது. ஆம் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கும் அதைவிட கொடூரமாகவே அமைகிறது.
பொதுவாக தமிழ்நாட்டு மக்கள், ’கல்யாணத்திற்கு போகாவிட்டாலும் கருமாதிக்கு போக வேண்டும்’ என்ற பழமொழியை அடிக்கடி சொல்வதுண்டு. பழமொழிதான் என்றாலும் இது நம் பண்பாடோடு இரண்டறக் கலந்துவிட்டது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க அலங்கார ஊர்தியிலோ, பாடையிலோ இறந்தவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டும்.
காலங்காலமாக தமிழர்களால் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியத்தை கரோனா வைரஸ் வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. உறவினர்கள் யாரும் உடலின் அருகில் இருக்கக் கூடாது, உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைக்குள் உடலை அடைக்க வேண்டும், சாதாரண துணியால் உடலை மூன்று அடுக்காக சுற்றி சீல் வைக்க வேண்டும், மிக ஆழமான குழியில் புதைக்க வேண்டும் அல்லது விரைவாக தகனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளோடு கரோனாவால் உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இறந்தவரின் உடலில் கரோனா எத்தனை நாள்கள் உயிருடன் இருக்கும் என்ற கேள்விக்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை கண்டறியப்படாததால் மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எட்டாவதாக உயிரிழந்த வேலூர் மாவட்டம் சைதாபேட்டையைச் சேர்ந்த நபரின் உடலும் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தே அடக்கம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். தூய்மைப் பணியாளர்கள் அவரின் உடலில் கிருமி நாசினி தெளித்து, துணியால் சுற்றி சீல் வைத்தனர். உடல் பிரத்யேக வண்டியில் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உடலின் அருகே அவரது உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், இடுகாட்டிலிருந்து 20 அடி தொலைவிலேயே சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டன. ஐந்து தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு தகுந்த முன்னெரிச்சையோடு உடலை புதைக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் உடலை 12 அடி குழிக்குள் பாதுகாப்பாக இறக்கி, மண்ணைப் போட்டு குழியை மூடினர். இறுதியில் அவர்கள் தங்களது உடைகளைக் கழற்றி தீயிட்டுக் கொளுத்திய பின் அங்கிருந்து சென்றனர்.
இறந்தவரின் முகத்தைக்கூட அவரது உறவினர்களை பார்க்க விடாமல் அவரை மண்ணுக்குள் புதைக்க வைத்தது கரோனா. இதுபோன்ற மரணங்கள் தரும் வலியை உணர்ந்து அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு, சமூக விலகலைக் கடைப்பிடித்து கரோனா வரும் முன்னே நம்மையும் நம் சுற்றத்தையும் பாதுகாப்போம்.
தனித்திருங்கள்! விழித்திருங்கள்! விலகியிருங்கள்!