வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினகரன்(32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது கணவர் போலீஸ் எனக்கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும்; அவர் போலீஸ் இல்லை எனவும் தெரியவந்ததையடுத்து கணவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூந்தமல்லி போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், வழக்குப்பதிவு செய்து தினகரனை பிடித்து விசாரித்தபோது தினகரன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போன்று போலியாக அடையாள அட்டையை வைத்துக் கொண்டு உயர் அலுவலர் ஒருவருக்கு வாகனம் ஓட்டுவதாகக் கூறி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தினகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலீஸ் என்று வைத்திருந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸ் வேலை வாங்கித்தருவதாக தினகரன் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும்; பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வீட்டிற்கு வந்து கேட்டதையடுத்து தினகரன் போலீஸ் இல்லை என அவரது மனைவிக்கு தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தாய், மகளைக் கொன்று நகைகள் கொள்ளை..!