வேலூர் : தொரப்பாடியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கான 27 ஆவது பேட்ஜ் பிரிவு 9 மாதகால அடிப்படை பயிற்சிகள் நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்கள் பிரிவில் டெல்லி,அருணாச்சலபிரதேசம்,தமிழ்நாடு ,கேரளா,தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கான பயிற்சி இன்று நிறைவு பெற்றது.
இப்பயிற்சியில் அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டு அவர்களின் அணிவகுப்பு மரியாதையினை தெலங்கானா மாநில சிறைத்துறை தலைவரும் மற்றும் ஏடிஜிபியுமான டாக்டர் ஜித்தேந்தர் பெற்றுகொண்டார். இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
இதில் சிறந்த ஆல்ரவுண்டராக அனுஜ் துணை கண்காணிப்பாளர் டெல்லி தேர்வு செய்யப்பட்டார். இது போன்று 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் டெல்லியை சேர்ந்த மாநில சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் சுர்பி ஹோடா தனக்கு வழங்கப்பட்ட சிறந்த பயிற்சி விருதை வாங்க மறுத்துவிட்டார். தாம் தான் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் தனக்கு நியாயமில்லை என வாங்க மறுத்து அதிகாரிகளிடம் கூறிவிட்டு திரும்பி சென்றார். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் டெல்லி சூப்பிரண்டண்ட் தேவேந்திர குமார் வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தெலுங்கானா சிறைத்துறை தலைவர் டாக்டர்.ஜித்தேந்தர் பேசுகையில், “உங்கள் அனைவருக்கு தெரியும் சிறை நிர்வாகம் என்பது சவால்கள் நிறைந்தது. சட்டம் ஒழுங்கை சிறையில் பாதுகாப்பது சவால்கள் நிறைந்தது. நீங்கள் இந்த சவாலை சாதாரணமாக ஏற்றுகொண்டால் வெற்றி பெறலாம். சிறையில் இருக்கும் அனைவரும் இந்த சமூகத்தினால் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர்.
ஆனால் சிறையிலிருந்து கைதிகள் விடுதலையாகி வெளியில் செல்லும் போது சமூகம் அவர்களை ஏற்றுகொள்ளும் வகையில் மாற்ற வேண்டும். சிறைகைதிகளுக்காக சிறையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறைகைதிகளுக்கு மனநிலை சார்ந்த பயிற்சிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆதரவோடு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தெலுங்கானா சிறை மேம்பாடு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் சிறையில் கைதிகள் தொழில் திறனை மேம்படுத்த பல்வேறு சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் தெலங்கானா சிறை நிர்வாகமும் அரசும் ரூ.200 கோடிக்கு சிறைகைதிகளுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக” பேசினார்.