வேலூர்: சமீபகாலமாக காட்பாடி வழியாக ரயில்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று (ஜூலை.11) சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.
கஞ்சா பறிமுதல்
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பையை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரயில் மூலம் கஞ்சா கடத்த முயன்ற கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த ஷாஜகான் (53), முகமது அனீஷ் சஃபி (21), முபாரக் (31) ஆகியேரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து, சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது