வேலூர்: ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட, சுமார் 16 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த இளம் சிறார் ஒருவரைச் சென்னையில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற முயற்சி செய்யும் போது, அந்த சிறுவன் பாதுகாப்பு இல்ல கட்டிடச் சுவர் மீது ஏறி கீழே இறங்காமல் அட்டகாசம் செய்தார்.
இதனால், வேலூர் இளம்சிறார் நீதிமன்ற குழும நீதிபதி பத்ம குமாரி நேரில் வந்து அந்த சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கீழே இறங்கச்செய்தார். இந்த நிலையில், மார்ச் 27-ல் மீண்டும் பாதுகாப்பு சுவரின் மீது ஏறி அட்டகாசம் செய்த இளம் சிறார் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 6 இளம் சிறார்கள் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து, 3 பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டு சுவர் ஏறித் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், தப்பி ஓடிய இளம் சிறார்களைப் பிடிப்பதற்காக, வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறார்களைத் தேடி வரும் நிலையில், ஒரு இளம் சிறாரை சென்னையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசில் சிக்கிய அந்த இளம் சிறாரை, வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திற்குத் தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர். மேலும், மீதமுள்ள 5 இளம் சிறார்களும் விரைவில் பிடிபடுவார்கள் என மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கலாசேத்ரா கல்லூரி விவகாரம் - பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு!