திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காப்புக்காடுகளை ஒட்டிய நிலப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வார காலமாக யானைக்கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த, வாழை, தக்காளி, கரும்பு, துவரை, நெல், ஆகிய பயிர்களை சேதப்படுத்திச் செல்கின்றன.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள் வருவதற்குள் யானைக்கூட்டம் பயிர்களை சேதப்படுத்திச் சென்று விடுகின்றன. மேலும், யானைக்கூட்டத்தை பட்டாசுகள் வெடித்து விரட்ட வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஓணாங்குட்டை பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்பவரின் நிலப்பகுதியில் புகுந்த யானைக்கூட்டம் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும் தக்காளி பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
இரவில் யானைக்கூட்டங்கள் நடமாட்டம் இருப்பதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உடனடியாக அரசு யானைக்கூட்டத்தை காட்டுப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 'சீட்டுல சின்னத்த காணோம்...' - மறு தேர்தலுக்கு வாய்ப்பு!