வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முதல் வேலூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் வேலூரில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அத்தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வாணியம்பாடி, காதர்பேட்டை சந்திப்புப் பகுதியில் முருகதாஸ் என்ற தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்துவந்தனர். அப்போது ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது காரை மடக்கி சோதனையிட்ட போது உள்ளே மூன்று கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரமேஷ் கொடுக்கவில்லை. இதையடுத்து அலுவலர்கள் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மோதிரம் உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களாக இருந்துள்ளது. இதையடுத்து வாணியம்பாடி வட்டாட்சியர் மூலம் இந்த நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வேலூரில் மறு தேர்தல் அறிவித்த பிறகு முதல் முறையாக மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.