பெங்களூருவிலிருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூருக்கு போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், இன்று (செப்டம்பர் 09) காலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளி கொண்டா காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், வேனில் சுமார் 50 பெட்டிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அனைத்து பெட்டிகளையும் பறிமுதல் செய்த பள்ளிகொண்டா காவல் துறையினர், வேனில் இருந்த பெங்களூருவைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் ஆரிப்கானை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.