வேலூர்: ஆங்கில புத்தாண்டையொட்டி விபத்துகள், குற்றச்செயல்களைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் நேற்று (டிச.31) வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்டம் முழுவதும் 940 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், நேற்று (டிச.31) இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுமட்டும் இல்லாது, இருசக்கர வாகனங்களில் மதுபானம் அருந்தி விட்டோ, அதிவேகமாகச் செல்லவோ, சாகசம் செய்யவோ கூடாது என்றும் அதனை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்குப் பரிசீலனை செய்யப்படும் என்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, சாலை விதிகளை மீறியது தொடர்பாக வேலூர் உட்கோட்டத்தில் 112 வழக்குகளும், காட்பாடி உட்கோட்டத்தில் 138 வழக்குகளும், குடியாத்தம் உட்கோட்டத்தில் 17 வழக்குகளும் என மொத்தம் 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 104 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்