வேலூர்: பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் எம்.எஸ். முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் 100 போலீசார் சனிக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் ஊறல் கண்டுபித்த போலீசார் அதை தரையில் ஊற்றி அழித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப்களின் மூலம் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், வேலூர் சரக காவல் துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100 போலீஸாரை உள்ளடக்கிய குழு பேர்ணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: Odisha Train Accident: குலுங்கிய ரயில், பிணக்குவியல்: விபத்தில் சிக்கி மீண்டவர்களின் பேட்டி
ட்ரோன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் போது மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு அடுப்பு, பேரல்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்திற்கு போலீஸார் நேரடியாக சென்று அங்கு சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் லிட்டர் ஊறல் முழுவதையும் கீழே கொட்டி அழித்தனர்.
மேலும், தப்பியோடிய சாராயம் காய்ச்சிய நபர்களையும் தேடி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, அதை கடத்துவது தொடர்பாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 63799 58321 என்ற வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் இயங்கும் உரிமம் இல்லாத 68 பார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் கோரிக்கை