கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இரண்டாவது வாரமாக இன்று(ஜூலை 12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சியிலும் முழு ஊரடங்கு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களைத் தவிர இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு மதுபானக் கடை அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுபானங்களை முன்கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்து, இன்று(ஜூலை 12) கள்ளத்தனமாக பலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கே.கே. நகர் அருகே ஐயப்ப நகர் சாஸ்தா தெருவில் உள்ள ஒரு வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, கே.கே. நகர் காவல் துறையினர், அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
அப்போது மதுபான வகைகள் அதிக அளவில் வாங்கி, குவித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் வசித்து வந்த சத்தியசீலன் (31) என்பவரை, காவல் துறையினர் கைது செய்து, மது பானங்களையும் பறிமுதல் செய்தனர்.