திருச்சியிலுள்ள செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக மண் தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் பேசிய தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார், "மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி மூன்றாம் உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இப்போது மேற்குலக நாடுகள் விழித்துக் கொண்டன. அங்கே தடைசெய்யப்பட்ட நச்சு தொழிற்சாலைகள் நம் நாட்டில் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக நதிகள், மலைகள், நிலவளம் நிலத்தடி என அனைத்தும் வரையறையின்றி கொள்ளைபோகின்றன.
மண்வளம் மலடாகி பன்னாட்டுப் பிடியில் இயற்கை வளங்கள் வணிகமயமாகிவருகிறது. மண்வளமின்றி மனித வளமில்லை. பல்லுயிர்கள் வாழ்வதற்கான ஒரு கோள் புவி மட்டுமே என்பதை உணர்ந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள் சாயக்கழிவுகளை நீரிலும் நிலத்திலும் கலக்காமல் தடுத்து மண் வளத்தை காத்திட வேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு மூங்கில், மலை வேம்பு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சென்னையில் காஃபி வித் கமிஷனர்.!