கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முதல்கட்ட ஊரடங்கு முடிந்தவுடன் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஏற்கனவே முதல்கட்ட ஊரடங்கின்போது திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையிலும், திருச்சி உறையூர் கோணக்கரை சுடுகாடு பகுதியில் ஒரு மதுபான கடையிலும் பூட்டை உடைத்து மதுபான திருட்டு நடந்தது.
இதைத்தொடர்ந்து ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபான வகைகள் அனைத்தும் திருச்சி மேலபுலிவார்டு சாலையில் உள்ள தேவர் மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 56 டாஸ்மாக் மதுபான கடைகளிலிருந்த மதுபான வகைகள் அனைத்தும் நேற்று மாலைமுதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு கண்காணிப்புக் கேமரா மூலம் இந்தப் பகுதி கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...மதுகிடைக்காத விரக்தி! மது பாட்டில்கள் கொள்ளை