திருச்சி: கீழ்அரசூர் கிராம நிர்வாகிகள் கல்லக்குடி காவல் நிலையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.
நேற்று (ஜனவரி 16) முழு ஊரடங்கு என்பதால், கல்லக்குடி காவல் துறையினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை கீழஅரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் சக காவலர் அங்கு சென்று கிராம மக்களை எச்சரித்து, போட்டி நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பலகைகளை அப்புறப்படுத்தினர்.
இதுபோல் இரண்டாவது முறையும் நடந்துள்ளது. மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவனுக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் சக காவலருடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். அப்போது மக்களை கலைந்து போகும்படி எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உதவி ஆய்வாளர் இளங்கோவன் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
தலையில் பலத்த காயமடைந்த இளங்கோவன் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குளிர் காலத்தில் சருமம் ஜொலிக்க வேண்டுமா...? இது மட்டும் போதும்