திருச்சி : துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருபவர், மணிவேல். இவர் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாடு ஊராட்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பசுமை வீடு திட்டத்தின்கீழ் பயன்பெற உள்ள பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் பயனாளிகள் ஐந்து பேர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்குள் வருவதும், அதில் ஒருவர் தாங்கள் 5 பேர் வந்துள்ளதாகவும், ஒரு வீட்டிற்கு 3000 வீதம் 15 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாகவும் கூறி; 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மணிவேல் இடம் கொடுக்கிறார். அந்த பணத்தை பெற்ற அவர், ’மீதித் தொகையை நான் பச்சை மலைக்கு வரும் பொழுது தரவேண்டும்’ எனக் கூறுகிறார்.
பின்னர் அருகில் இருந்த நபர் ஒருவர் சார் இந்த தொகைக்குள்ளேயே அனைத்து வேலைகளையும் முடித்து தந்து விடுவார் எனக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. துறையூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், பழங்குடியின மக்களிடம் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.7000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளர் கைது