இது தொடர்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று (செப்டம்பர் 8) செய்தியாளர்களைச் சந்தித் அவர் கூறுகையில், “கரோனா காலத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் 541 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 10 விழுக்காட்டுக்கும் மேல் பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். மாநில அரசு பணிகளில் 100 விழுக்காடு மண்ணின் மைந்தர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
தனியார் துறையிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் 90 விழுக்காடு மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதி தேர்வு ஆகாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதைக் கண்டித்து ஒரு வாரம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தொடர் மறியல் போராட்டம், செப்.11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது" என்றார்.