திருச்சி மாவட்டம் கொள்ளிடம் நம்பர் ஒன் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஜனவரி 28ஆம் தேதி 470 சவரன் நகைகள், 19 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளைபோனது. இது தொடர்பாக சமயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொள்ளைச் சம்பவம் நடந்து 9 மாதங்களுக்கு மேலாகியும் கொள்ளையர்கள் குறித்த எந்தத் துப்பும் துலங்காத நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளைபோனது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முருகன், மணிகண்டன், சுரேஷ், கனகவல்லி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கியக் குற்றவாளியான முருகன் வேறொரு கொள்ளை வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பெங்களூர் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லலிதா ஜுவல்லரி கடையில் கொள்ளையடித்த நபர்கள்தான் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு இடங்களில் கொள்ளைக்கு சுற்றுலா வேனையே கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் அம்பலமானது. கொள்ளையடிக்கப்பட்ட நகையை வேனில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வங்கிக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த வெல்டிங் தொழிலாளி ராதா கிருஷ்ணன் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். வங்கிக் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சுற்றுலா வேனை தனிப்படை காவல் துறையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டிங் இயந்திரங்கள், முகமூடி, ஷொட்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் ஐந்து நாட்களாக ஓட்டை போட்ட கொள்ளையர்கள் - திருச்சி ஆணையர்