திருச்சி: ஶ்ரீரங்கம் திருவானைக்காவல் மாம்பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டும் இல்லாமல், சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகள் சைல்டு லைன் (child line) மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மூச்சுத் திணறலால் ஒரு குழந்தை இறந்துவிட்டது. மேலும் பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 30ஆம் தேதி காப்பகத்தில் உள்ள 3 மாதம் முதல் 9 மாதம் வரையிலான 20 பச்சிளம் குழந்தைகளுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக வழக்கமான தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் 2 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காப்பக பணியாளர்கள் உடனடியாக அந்த குழந்தைகளை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அந்த 8 குழந்தைகளுக்கும் சளி தொந்தரவு இருந்த நிலையில், அதற்குரிய மருத்துவம் பார்க்காமல் தடுப்பூசி செலுத்தியதால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்டது. மேலும் சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர்.
காப்பகத்தில் உள்ள குழந்தைகளில் 9 குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 3 குழந்தைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிகிச்சை முடிந்து காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று இரவு பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன பெண் குழந்தையும், கார்குழலி என்ற 3 மாத பெண் குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தது.
அரசு நிதி உதவியுடன் இயங்கும் காப்பகத்தில் அடிக்கடி குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதும், இறந்து போவது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவங்களை குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறியது, "திருச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து செய்திகள் பல வந்தாலும் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்கை காண்பிக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது’’ என்கின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்!