திருச்சி: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தினால், பள்ளிகளில் தேர்வுகளை விரைந்து முடிக்கக்கோரி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்காலம் அறிவிக்கப்பட்டதைத் தொடந்து, பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் விளையாடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறை அடுத்த வைரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவர். இவர், கோயமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். முருகேசனும் அவர் மனைவி சுதாவும் கடந்த ஏழு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் மனைவி சுதாவையும், மூன்று நாட்களுக்கு முன் தனது இரு மகன்களையும் முருகேசன் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே 17) காலை, முருகேசன் வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அப்போது, பள்ளி விடுமுறையில் இருந்த அவருடைய மகன்கள் லோகநாதன் (வயது 12) மற்றும் ஸ்ரீ தருண் (வயது 7) இருவரும் வெளியே விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஒல்லியமங்கலம், சேர்வைக்காரன்பட்டி எத்தவேளாண் வெத்தலாங்குளத்தில் மூழ்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்து உள்ளனர்.
விளையாடச் சென்ற சிறுவர்கள் இன்னும் வீடு திரும்பாததை எண்ணி, சிறுவர்களின் தாய் சுதா குழந்தைகளை தேடியுள்ளார். எங்கு தேடியும் சிறுவர்கள் கிடைக்காத நிலையில், மதியம் ஒரு மணி அளவில் குளத்தின் அருகே அவர்களின் உடைகள் கிடப்பதைக் கண்டு சந்தேகத்தின் பேரில் குளத்தில் தேடி பார்த்த போது இரண்டு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காரையூர் காவல் நிலைய போலீசார் சிறுவர்களின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டு தோறும் பள்ளி கோடை விடுமுறை சமயங்களில் நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டுமே, பெற்றோர்களுக்கு கிடையாது. மாணவர்களின் விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்ற நூலகத்திற்கு அனுப்பி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். மாணவர்களை நீர் நிலைகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு எனக் கோடை விடுமுறை அறிவிப்பிற்கு முன்னதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கள்ளச்சாரய உயிரிழப்பு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் ஆர்.என். ரவி!