திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வத்தின் சகோதரர்களான ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகிய மூவரும் சேர்ந்து சுதாகரின் அண்ணனான சுரேஷை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இதற்கு பழி வாங்கும் வகையில் சுதாகர், 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பன்னீர்செல்வத்தின் தாய் செல்லம்மாள், அத்தை அமராவதி, உறவினர் சதீஷ் ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் செல்லம்மாள், அமராவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஷ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து லால்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுதாகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.