திருச்சி: தலைக்கவசம் இல்லாமல், கழுத்து நிறைய நகைகளுடன் புதுமணப்பெண் போல் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் பைக் ஒட்டிச்சென்றது சர்ச்சையானது. அவர்மீது மதுரை போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது குறித்து பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற ரவுடி மீது வழக்குப்பதிவு என செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார்.
அதில் காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் ஒரு ஹோட்டலில் உணவருந்த சென்றதாகவும், அங்கு யதேச்சையாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதனை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அப்பதிவை டிவிட்டரிலிருந்து நீக்கி விட்டு, பின்னர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் வரிச்சியூர் செல்வம் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக வரிச்சியூர் செல்வம் பத்திரிகையாளர்களிடம் அளித்த ஒரு பேட்டியில், அதில் தன்னை 'ரவுடி' என்று கூற வேண்டாம் எனவும்; கோமாளி என்று கூறினால் சந்தோஷப்படுவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், திருச்சி பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா, அவரது டிவிட்டர் பக்கத்தில் என்னை ரவுடி என பதிவு செய்திருந்தார்; அதற்காக தன்னிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் எனப் பேட்டியளித்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் திருச்சி சூர்யா சிவா திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (பிப்.12) பேசினார்.
அதில், 'வரிச்சியூர் செல்வம் தன்னை ரவுடி என சொல்லாதீர்கள் என்றார். ரவுடியை வேறு என்னவென்று சொல்வது, ரவுடி என்று தானே சொல்லமுடியும்.
டிவிட்டரில் அந்த புகைப்படத்தை நான் அகற்றிவிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் ரவுடி வரிச்சியூர் செல்வம் பேசியுள்ளார். அன்று இரவு காயத்ரி ரகுராம் எங்கிருந்தார்? என்பது காவல் துறையினருக்கே தெரியவில்லை. ரவுடி வரிச்சியூர் செல்வம் கெஞ்சியதால் போட்டோவை அகற்றினேன். அவர் மிரட்டியதாலோ, ரவுடி என்பதாலோ போட்டோவை அகற்றவில்லை.
அப்போது காயத்ரி ரகுராமுடன் இருந்த தனிப்பட்ட விமர்சனங்களின் வெளிப்பாடாக அந்த புகைப்படத்தை வெளியிட்டேன். இந்நிலையில், அதுகுறித்து காயத்ரி ரகுராம் எந்த விளக்கமோ, மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை' என்று கூறினார். மேலும் பேசிய அவர், 'திருச்சி சூர்யாவாகிய நான் பாஜக தொண்டராக தற்போதும் தொடர்கிறேன். தனது ராஜினாமாவை பாஜக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், வரிச்சியூர் செல்வம் தான் தன்னிடம் மன்னிப்பு கேட்டார். தான் அவரிடம் மன்னிப்புக்கேட்கவில்லை' என்று கூறிய அவர் அதற்கான ஆடியோவையும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
'வருகின்ற 2026ஆம் ஆண்டு வரை அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பார் என்றும்; 2026-ல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும்' என்றும் நம்பிக்கை தெரிவித்தார். எனவே, 'அப்போது அண்ணாமலை தான் முதலமைச்சர். அதனைத்தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவரே பாஜகவின் தலைவராக இருப்பார்; நான் அண்ணாமலையின் A டீம்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னுடைய அரசியல் எதிரி 'சாதி' தான் - நீலம் பண்பாட்டு மைய நிகழ்ச்சியில் கமல் பேச்சு!