திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பகல்பத்து வைபவத்தில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கிவருகிறார்.

இந்த நிலையில் இன்று (டிச. 24) ஸ்ரீரங்கம் பகல்பத்து பத்தாம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பகல்பத்து, ராப்பத்து
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் என பகல்பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முதற்கட்டமாக பகல்பத்து வைபவம் நடைபெற்றுவருகிறது. பகல்பத்து வைபவத்தில் இறுதி நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இன்றைய சிறப்பு அலங்காரம்-மோகினி
உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார். இதில் 10ஆம் நாளான இன்று நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) புறப்பட்ட நம்பெருமாள் காலை 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளைத் தரிசித்தனர். இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
சொர்க்கவாசல் திறப்பு


சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் அனுமதி
கரோனா தடுப்பு நடவடிக்கையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பக்தர்கள் அனுமதி இல்லை. எனினும் கோயில் உள்புறம், வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் இன்று இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

நாளை காலை 8 மணிக்குப் பின்னர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று கூறியிருப்பது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பகல்பத்து 9ஆம் நாள்: முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்