வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருத்தலம், திருச்சி - ஸ்ரீரங்கம். இங்கு ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு தைத்தேர் உற்சவமானது, கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பல்வேறு வாகனங்களில் ரெங்கநாதர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவின் 9ஆம் திருநாளான இன்று தைத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மகர லக்னத்தில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டுத் தேரில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து, காலை 6.30 மணிக்குத் திருத்தேரை பக்தர்கள் ரெங்கா ரெங்கா கோஷத்துடன் இழுத்தனர். திருத்தேரானது நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து சுமார் 8 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்திருந்தார். இதில், 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தெப்பத் திருவிழா: தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்