திருச்சி: இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா (New Parliament Building Inauguration) வரும் மே 28ஆம் தேதி நடக்க உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.970 கோடி மதிப்பீட்டில் 4 மாடிகளுடன் 1,224 எம்.பி.க்கள் அமரக்கூடியவாறு இந்திய ஜனநாயகத்தின் பாரம்பாரியத்தை வெளிப்படுத்தும் விதமாக மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் அழைப்பை ஏற்று வரும் மே 28ஆம் தேதி இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான நிகழ்ச்சியில் நமது குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை இந்த கட்டடத்தை திறக்க விடாமல் பிரதமர் மோடி தானே இதனைத் திறந்து வைக்கும் முடிவை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை (President of India Droupadi Murmu) அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், மே 28ஆம் தேதி நடக்கும் திறப்பு விழாவை புறக்கணிக்கப்பதாக, 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிபிஎம்(மார்க்சிஸ்ட்), ஆர்ஜேடி, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், நாட்டின் மிக முக்கியமான இந்த திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பது ஏன்? என திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், அரசியல் சட்டத்தின் 79வது பிரிவு இந்திய துணைக்கண்டம் என்ற ஒன்றியத்திற்கு ஒரு 'நாடாளுமன்றம்', குடியரசு தலைவர், இரண்டு அவைகள் ஒன்று 'மாநிலங்களவை' மற்றொன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ள 'மக்களவை'. இதனுடைய தொகுப்பு தான் நாடாளுமன்றம் என்று வரையறுத்து சொல்லப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் அதிகாரங்கள் இந்த நாட்டின் தலைவர் என்பதை கடந்து நாடாளுமன்றத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளார்.
உச்சக்கட்ட அதிகாரம் உள்ள குடியரசு தலைவரை புறக்கணிப்பதா?: இரண்டு அவைகளும் சேர்ந்து நிறைவேற்றப்படுகின்ற ஒரு மசோதா எவ்வளவு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அது 'சட்டம்' ஆகாது. ஆக உச்சகட்ட அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, உறுப்பினர்களுக்கு கூட்டம் கூடுகின்ற தேதியை அறிவிப்பார். அவர்தான், அவையை ஒத்திவைப்பார்; குடியரசு தலைவர் தான் இரு அவைகளுக்கிடையே உரை நிகழ்த்துவார். இவ்வளவு உச்சlகட்ட பொறுப்பில் உள்ளவர்களை புறக்கணித்து விட்டு இன்றைக்கு புதிய நாடாளுமன்றம் கட்டடம் திறக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றம்; குடியரசு தலைவரே திறக்க வேண்டும்: நாடாளுமன்ற கட்டடம் என்பது சிமெண்ட் கற்களால் கொண்ட கட்டடம் அல்ல. மாறாக இந்திய நாட்டை பொறுத்தவரை அது 'ஜனநாயகத்தின் ஆலயம்'. அப்படிப்பட்ட மாண்பு உடைய மன்றம் என்பதின் அடையாளமாக திகழ்கின்ற கட்டடத்தை குடியரசு தலைவரை கொண்டுதான் திறக்க வேண்டும். அதற்கு அடிக்கல் நாட்டியதும் பிரதமர் நரேந்திர மோடி தான் இப்போது திறந்து வைப்பதும் இன்றைய பிரதமர் தான். மரபு படி முதலில் வருபவர் குடியரசு தலைவர் இரண்டாவது துணை குடியரசு தலைவர் மூன்றாவது தான் பிரதமர் வருகிறார்.
குடியரசு தலைவரை மோடி புறக்கணிக்கிறாரா?: எந்த காரணத்தினால் பிரதமர் குடியரசு தலைவரை புறக்கணிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இன்றைய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்ட போது மலை வாழ் பிரிவை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்கிறோம் என்று மார்த்தட்டி கொண்டு பெருமைப்பட்டு கொண்டனர். எல்லோருக்குமே அதில் மகிழ்ச்சி உள்ளது. ஆனால், இன்றைக்கு ஏன் அவர் குடியரசு தலைவருக்கு மரியாதை தரவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் இன்று நாடாளுமன்ற கட்டடத்தின் ஒரு பகுதியாக செயலகமாக கருதப்படலாம். குழு கூட்டங்கள் நடத்த பெரிய பெரிய அரங்கங்கள் அதில் உள்ளன.
1970-ல் அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரி அடிக்கல் நாட்டினார். ஆனால், 1975 அக்டோபர் மாதம் திறக்கப்படும் போது அவசர நிலை கால கட்டத்தில் பிரதமர் ஆக இருந்த இந்திரா காந்தி அதை திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தில் ஒரு புதிய நூலக கட்டடம் உள்ளது. ஆசியாவிலேயே மிக பெரிய நூலகம் என்று சொல்வார்கள். அவ்வளவு பெரிய நூலகம் கட்டடத்தை திறக்கப்படும் போது, அன்றைய குடியரசுத் தலைவர் 2002 ஆம் ஆண்டு கே.ஆர்.நாராயணன் அவர்கள் தான் திறந்து வைத்தார்.
போர் நினைவு சின்னம்: அண்மையில் 'போர் நினைவுச் சின்னம்' திறக்கப்பட்டது. போர் களத்தில் உயிர் நீத்த வர்கள் இந்தியாவில் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற வீரர்கள், தியாகிகள் நினைவாக போர் நினைவுச் சின்னம் உள்ளது. அந்த போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் தான் திறந்து வைத்தார். அரசியல் சட்டப்படி, மூன்று படை பிரிவுகள் உள்ளன. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகிய முப்படை தளபதியாக இருப்பவர் குடியரசு தலைவர் தான்.
அப்போது ராம்நாத் கோவிந்த்-யை அழைக்காதது ஏன்?: ஆனால், போர் நினைவுச் சின்னத்தை திறக்கும்போது, அன்றைக்கு இருந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை அழைக்காமல் பிரதமர் மோடி தான் திறந்து வைத்தார். குடியரசு தலைவர்க்கு எந்த அதிகாரமும் இருந்தால் பரவாயில்லை அரசியல் சட்டம் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை நான் நினைத்ததை தான் செய்வேன் எல்லாம் நானே என்ற ஒரு மனநிலை இந்திய நாட்டில் பிரதமருக்கு இருக்க கூடாது. எங்களுடைய கவலை என்னவென்றால் உலகத்தில் மிகப்பெரிய ஐனநாயக நாடான இந்தியா மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
குடியரசு தலைவர் இல்லாமல் எப்படி?: 140 கோடி மக்களுக்கு சட்டங்களை இயற்றுகின்ற மன்றம் நிறைய விவாதங்களை நடத்துகின்ற மன்றம்; பெரிய பெரிய பிரச்னைகள் குறித்து பேச கூடிய மன்றத்தின் தொடக்கம் குடியரசு தலைவர் இல்லாமல் எப்படி? அரசியல் சட்டத்தில் உச்சக்கட்ட அதிகாரத்தில் உள்ள குடியரசு தலைவரை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு பிரதமர் செய்யும் செயல் ஜனநாயகத்திற்கு அழகு அல்ல; அது இழுக்கு என்ற வகையில் தான் 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அறிவிக்கை கூட்டாக கொடுத்துவிட்டு திறப்பு விழாவை புறக்கணிப்பது என நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: திமுக, விசிக புறக்கணிப்பு