திருச்சி திருவெறும்பூர் நடராஜபுரம் நடு தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் வேங்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி மாணவ மாணவியரை பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட மனோகரன் பேருந்தை ஓரமாக நிறுத்தி மாணவ மாணவியரின் உயிரைக் காப்பாற்றினார்.
இதையடுத்து, வலியில் துடித்த மனோகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரின் மனைவி லட்சுமி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அவர் ஒரு மனு அளித்தார். அதில், "எனது கணவர் குழந்தைகளை காப்பாற்றிவிட்டு இறந்துள்ளார்.
ஆனால் இதற்காக பள்ளி நிர்வாகம் எவ்வித இழப்பீட்டுத் தொகையும் இதுவரை வழங்கவில்லை. எனது கணவர் அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார். இதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். ஆகையால் மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுத்து பள்ளி நிர்வாகத்திலிருந்த இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: