திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மான்பூண்டி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல் துணைக்கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3 ) அதிகாலை மான்பூண்டி ஆற்றிலிருந்து மணல் திருட்டுத்தனமாக அள்ளிக் கொண்டு வந்த டிராக்டரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்த செவலூர் பகுதியைச் சேர்ந்த ராசு மகன் சண்முகநாதன்(25) என்பவரைக் கைது செய்தனர்.
இதேபோல் மற்றுமொரு பகுதியான பூமாலைபட்டி பகுதியில் இருந்து வந்த டிராக்டர் ஒன்றில் கான்கிரீட் ஓடுகளைப் பரப்பி வைத்து மணல் கடத்தி வந்த வாகனத்தை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். மேலும் டிராக்டர் ஓட்டுநர் சின்னு என்ற குழந்தைவேல் (60) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மணப்பாறை பகுதியில் நடைபெறும் தொடர் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் வருவாய்த்துறையினர் காட்டும் மெத்தனப்போக்கு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.