திருச்சி முசிறியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
திருச்சி தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து மற்றும் முசிறி பஞ்சாயத்துகள் காவிரி படுகையில் அமைந்துள்ளன. இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீரை நம்பியே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கோட்டூர், ஆம்பூர், கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி ஆற்றை நம்பியுள்ளன.
ஆனால், இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்குச் சென்றுவிட்டது. அய்யம்பாளையம் முதல் குணசீலம் வரையிலான பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கில், இதுகுறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஆணையர் அறிக்கையிலும் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குணசீலம், மஞ்சக்கோரை பகுதியில் புதிதாக மணல் குவாரி அமைக்க அரசு முயன்று வருகிறது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால், விவசாயம் பொய்த்துப் போவதோடு நிலத்தடி நீர்மட்டம் இல்லாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது. ஆகவே, குணசீலம் மஞ்சக்கோரைப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் அரசு மணல் சுரங்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மதுரை நீதிமன்ற உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு திருச்சி குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.