கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், திருநங்கைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புக்காக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக வாட்ஸ்அப், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வழிகளில் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஊரடங்கு காரணமாக திருச்சி சரக காவல் எல்லைக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வரப் பெற்றது.
ஊரடங்கு காரணமாக பொதுமக்களால் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த ஐந்து மாவட்ட மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை ‘கூகுள் மீட்’ செயலி மூலம் காணொலிக் காட்சி வாயிலாக பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க டிஐஜி பாலகிருஷ்ணன் முடிவு செய்தார்.
இந்தக் காணொளி காட்சியில் பங்கேற்க 0431 2333909 என்ற தொலைபேசி எண்ணில் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்த நபர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் காணொலிக் காட்சி மூலம் டிஐஜி தொடர்புகொண்டு குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.