திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் டேப் காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த காவலாளி செந்தில்குமார் (வயது 43) என்பவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இரவு நேரத்தில் அவர் வணிக வளாகத்தில் உள்ள மின்தூக்கி அருகே உறங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை செந்தில்குமார் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவருக்கு அருகில் ரத்தக்கறை படிந்த பெரிய அளவிலான கருங்கல் கிடந்தது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்பது குறித்து கண்டோன்மெண்ட் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அந்த வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில் ஒரு நபர் மூன்று முறை பெரிய கல்லைக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்த செந்தில்குமாரின் தலையில் போட்டு கொலை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் தலையில் கல்லை தூக்கி போட்டவுடன் செந்தில்குமார் சட்டைப்பையில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அந்த நபர் திருடி செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் சைக்கோ என்பது தெரியவந்தது. இதுபோல் இரவில் உறங்குபவர்கள் தலையில் கல்லைப்போட்டு கொள்ளையடிக்கும் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவருவது தெரியவந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதே பாணியில் ஏற்கனவே சேலம், உடுமலைப்பேட்டையில் சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் அங்கே ஈடுபட்ட அந்த சைக்கோ இங்கேயும் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: புற்றாக மாறிய பைக்! சுகம் கண்ட பாம்பு!