திருச்சி : அரியமங்கலம், உக்கடை புங்களாயி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் திருநங்கைகளான தமிழ் மற்றும் நபியா. இருவரும் முன்தினம் இரவு மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் முன்புறக் கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த 2 விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. வீட்டினுள் மற்ற அறைகளை பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்கநகை, 60ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று நேற்று இரவு மின்வெட்டை சாதமாக பயன்படுத்தி கேகே நகர் அழகிரி தெருவில் வசித்துவரும் பிரபாவதி (37) என்பவரது வீட்டில் 3 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் மின்வெட்டை பயன்படுத்தி தற்போது தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து ஆறு பவுன் தங்க நகை திருட்டு