கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஆனால் பலரும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். இதையடுத்து காவல் துறையினர் நடவடிக்கைகளைக் கெடுபிடி ஆக்கினர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரும் வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வகையில் திருச்சி மாநகரில் நேற்று (ஏப்.8) ஒருநாள் மட்டும் 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 136 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து திருச்சி கே.கே. நகர் பகுதியில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் கார்கள் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் கரோனா வைரஸ் ஏதும் பரவி இருக்குமோ என்ற அச்சம் எழுந்ததன் காரணமாக காவல் துறையின் வஜ்ரா வாகனம் மூலம் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல் அடுத்து வரும் நாட்களிலும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வாகனங்களைப் பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரே நீதிமன்றம் மூலம் பெற முடியும் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.